விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி 3ம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரக்சிதா மகாலட்சுமி. பிரிவோம் சந்திப்போம், இளவரசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார். மிக அழகான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த போது, அதில் தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரையே திருமணம் செய்துக்கொண்டார்.
ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். எனினும் தினேஷ், ரக்சிதாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக கூறி வரும் நிலையில், ரக்சிதா அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். இதற்கிடையே தனது சமூக வலைதள பக்கங்களில் பெண்கள் யாருக்கும் அடிமையாக வாழக் கூடாது. தனித்து வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்.
இந்த முறை நடந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், ரக்சிதாவின் கணவர் தினேஷ் பங்கேற்றார். கடந்த முறை பிக்பாஸ் சீசன் 6ல் அவரது மனைவி ரக்சிதா மகாலட்சுமி கலந்துக்கொண்டார். ஆனால் டைட்டில் வின்னர் ஆகவில்லை. அதே போல் அவரது கணவரும் டைட்டில் வின்னர் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஒரு புதிய படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க ரக்சிதா கமிட் ஆகியிருக்கிறார். அந்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. ஏற்கனவே அவர் உப்புக்கருவாடு என்ற படத்தில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் போதும். அவர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று கமல் பொய் சொன்னாரா என்ற கேள்வியை சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரக்சிதா மகாலட்சுமியிடம் நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ரக்சிதா மகாலட்சுமி, திறமை இருப்பவர்களை தேடி கண்டிப்பாக சினிமா வாய்ப்பு வரும், திறமை இல்லாதவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. பிக்பாஸ் வீடு என்பது ஒரு பிளாட்பாரம். அங்கு திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு. அந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டால் அடுத்தடுத்த வெற்றிகள் தேடி வரும். கலைஞர்கள் என்பதால் சினிமா வாய்ப்பு அமையும் என்றுதான் கமல் சொன்னார். அவர் பொய் சொல்லவில்லை.
திறமை என்று ஒன்று இல்லாவிட்டால் எதுவுமே பண்ண முடியாது. பிக்பாஸில் கலந்துக்கொண்டவர் என்பதற்காக யாரும் வாய்ப்பு தர மாட்டார்கள்.வாய்ப்பை உருவாக்கும் அந்த திறமை நம் கையில்தான் உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம், பரிச்சயம் கிடைத்த பிறகும் அவர்கள் பழையபடியே இருக்க போகிறார்களா, அல்லது திறமையை வெளிப்படுத்தி அடுத்தடுத்த கட்டங்களில் நகர்ந்து ஜெயிக்கப் போகிறார்களா என்றுதான் கமல் சொல்லி வருகிறார், என விளக்கம் தந்தார் ரக்சிதா மகாலட்சுமி.





