கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் தேதி விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 8 துவங்கியது. கடந்த 7 ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக நடத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது.
இன்று 101வது நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வரும் நிலையில், வரும் ஞாயிறுடன் இந்த சீசன் 8 நிறைவடைய உள்ளது. அன்று இரவு பிக்பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் யார் என்று அறிவிக்கப்படுவார்கள். சௌந்தர்யா அல்லது முத்துக்குமரன் இருவரில் ஒருவர்தான் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
இந்த சூழலில் தற்போது பணப்பெட்டி டாஸ்க் நடந்து வருகிறது. வழக்கமாக கடந்த 7 சீசன்களிலும் பணப்பெட்டியை வைத்தால் விரும்பிய போட்டியாளர் குறிப்பிட்ட தொகையுள்ள பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறி விடலாம். பிறகு போட்டியில் தொடர இயலாது. பிக்பாஸ் வீட்டுக்குள் வரவும் முடியாது.
ஆனால் இந்த முறை அந்த விதிமுறையில் பிக்பாஸ் மாற்றம் செய்துள்ளார். குறிப்பிட்ட தூரத்தில் குறிப்பிட்ட தொகை குறிப்பிட்ட பணப்பெட்டி இருக்கும். அதை குறிப்பிட்ட வினாடிகளுக்குள் சென்று எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்து விட்டால், அவர்கள் போட்டியில் தொடரலாம். பிக்பாஸ் வீட்டுக்குள் தொடர்ந்து இருக்கலாம்.
அப்படி பெட்டியை எடுத்து ஓடி வரும்போது தாமதமாகி விட்டால் பிக்பாஸ் கதவு மூடப்படும். அந்த போட்டியாளர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார். அவர் எடுத்த தொகையும் அவருக்கு கிடைக்காது. இந்த புதிய விதிமுறைப்படி நேற்று 50 ஆயிரம் ரூபாய் பெட்டியை 15 விநாடிகளில் ஓடிச் சென்று முத்துக்குமரன் எடுத்து வந்து விட்டார்.
இன்று 2 லட்சம் ரூபாய் பணப்பெட்டி வைக்கப்பட்டு, 25 விநாடிகளில் 45 மீட்டர் துாரத்தில் இருந்து எடுத்துவர டாஸ்க் வைக்கப்பட்டது. போட்டியாளர் ரயான் மின்னல் வேகத்தில் ஓடி 7 வினாடிகள் இருக்கும் போதே ரூ. 2 லட்சம் பணப் பெட்டியை எடுத்து வந்துவிட்டார். அவர் குறிப்பிட்ட நேரத்துக்குள் வருவாரா என சக போட்டியாளர்கள், பார்வையாளர்கள் திக் திக் மனநிலையில் காத்திருந்தனர். ஆனால் ரயான் ஜெயித்து விட்டார். இப்போது வின்னர் பரிசு தொகை ரூ. 50 லட்சம் என்பதில் 47.5 லட்சமாக குறைந்துள்ளது.





