தமிழ் சினிமாவில் நடிகராக அவர் நடித்த படங்களில் எம்ஜிஆர் பல உதவிகளை செய்வார். கஷ்டப்படும் மக்களுக்கு உதவுவார். படகோட்டி என்ற படத்தில் அவர் சாப்பிடும் போது ஒரு பெண் பசி என்று வந்ததும் அவர் உண்ணும் உணவை தந்து விடுவார். சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்தில் அப்படி ஒரு வள்ளல் தன்மை கொண்டவர்தான் எம்ஜிஆர். அதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணமாக இருக்கிறது.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த நேரம் அது. அப்போது தினமும் எம்ஜிஆர் வீட்டில் இருந்து புறப்பட்டு காரில் அலுவலகத்துக்கு செல்வார். அப்போது குறிப்பிட்ட ஒரு இடத்தில் தினமும் காத்திருக்கும் ஒரு மாற்றுத் திறனாளி முதியவர் எம்ஜிஆர் கார் அந்த பகுதியை கடக்கும் போது காரை பார்த்து கையெடுத்து கும்பிடுவதை வழக்கமாக செய்திருக்கிறார்.
இதை பார்த்த அங்கிருந்த சிலர், நீ எம்ஜிஆர் காரை பார்த்து கும்பிட்டால் எம்ஜிஆர் காரை விட்டு இறங்கி வந்து உனக்கு உதவி செய்து விடுவாரா? என்று கிண்டலாக கேட்டிருக்கின்றனர். அதற்கு அந்த முதியவர், கோவிலுக்கு சென்று சாமியை கும்பிடுகிறோம். கேட்ட வரத்தை தர சாமி நேரில் வருகிறதா என்று திருப்பி கேட்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் ஒரு நாள் போலீஸ் பாதுகாப்புடன் அவ்வழியாக எம்ஜிஆர் கார் வந்த போது, அந்த முதியவர் வழக்கமான இடத்தில் நின்று எம்ஜிஆர் காரை பார்த்து கும்பிட்டுள்ளார். அதை கவனித்த எம்ஜிஆர் காரை நிறுத்துமாறு கூறி இறங்கி அந்த முதியவரிடம் வந்திருக்கிறார். தினமும் என் காரை பார்த்து கும்பிடுகிறீர்கள், என்ன வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்த முதியவர், ஐயா நான் மாற்றுத்திறனாளி, என்னால் நடக்க முடியாது. யாசகம் பெற்று என் குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன் என்று கூறியிருக்கிறார். உடனே அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் பணம் தந்த எம்ஜிஆர், ஒரு பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்திக் கொள்ளுங்கள், நீங்கள் என்னுடைய ரசிகர் என்றால் உங்கள் கடையில் பீடி சிகரட் போன்றவற்றை விற்க கூடாது என்றும் சிரித்தபடி கூறியிருக்கிறார்.
மேலும் அந்த முதியவரிடம் பேசிய எம்ஜிஆர், இனி ஏதாவது உதவி என்றால் இப்படி வழியில் நிற்காதீர்கள். நேராக வீட்டுக்கு வந்துவிடுங்கள் என்றும் அவருக்கு எம்ஜிஆர் அன்பு கட்டளையிட்டுள்ளார். ரோட்டோரத்தில் நிற்பவர்களை கூட கவனித்து தேடிப் போய் உதவும் எம்ஜிஆர் குணத்தை அறிந்து அங்கிருந்தவர்கள் எம்ஜிஆர் எம்ஜிஆர்தான் என்று புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர்.





