சினிமாவில் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நன்கு பிரபலமாகி பெரிய நடிகரான பிறகு, ஒரு கட்டத்தில் சில நடிகர், நடிகைகள் அரசியலுக்கு வந்து விடுகின்றனர். அரசியல்வாதியாக ஜெயித்தவர்களும் இருக்கின்றனர், பெரிய அளவில் தோற்றவர்களும் இருக்கின்றனர். இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி சினிமாவிலும் இருந்து வருகிறது.
எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் தமிழக அரசியலில் ஜெயித்தவர்கள். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், சரத்குமார், கே பாக்யராஜ், டி ராஜேந்தர், கார்த்திக், கருணாஸ், மன்சூர் அலிகான் போன்றவர்களால் ஜெயிக்க முடியவில்லை. விஜயசாந்தி, ரோஜா, குஷ்பு, நக்மா, குத்து ரம்யா போன்றவர்களும் அரசியலில் இருக்கின்றனர்.
அதே போல் மலையாள சினிமா உலகில், இப்போது பாஜக எம்பியாக இருப்பவரும், மத்திய இணை அமைச்சராக உள்ளவருமான சுரேஷ்கோபி, மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழில் தீனா படத்தில் அஜீத்குமாருடன் நடித்திருந்தார். ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த ஐ படத்தில், வில்லனாக டாக்டர் கேரக்டரிலும் நடித்திருந்தார்.
சமீபத்தில் சென்னையில் நடந்த சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமார் திருமண வரவேற்பு விழாவில், திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சரத்குமார், ராதிகா நடத்தி வரும் சமத்துவ மக்கள் கட்சி, பாஜகவுடன் இணைந்துள்ளதால், பாஜக இணையமைச்சராகவும், சரத்குமாரின் நண்பராகவும் உள்ள சுரேஷ் கோபி இந்த விழாவில் பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ் கோபி கூறியதாவது, கேரளம் மக்களின் ஆசிர்வாதத்தால் நான் எம்பி ஆகியுள்ளேன். நான் தமிழ்நாட்டுக்கும் அமைச்சராக பணிசெய்வேன். கேரளாவில் பிறந்தாலும், தமிழ்நாடு நாடு வளர்ந்த இடம். நடிக்க வாய்ப்பு தந்து, தூங்க இடம் தந்த தமிழ்நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன்.
பெட்ரோலியம், சுற்றுத்துறையில் எனக்குள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி, தமிழ்நாட்டுக்கான திட்டங்களை கண்டிப்பாக செய்து தருவேன். சபரிமலையில் கடந்தாண்டு பக்தர்களின் சுவாமி தரிசனத்துக்கான முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை, என்றார். நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சுரேஷ் கோபி பதிலளிக்க மறுத்துவிட்டார். விஜய், சமீபத்தில் நீட் விலக்கு குறித்து பேசியது, பாஜக அரசை ஒன்றிய அரசு என குறிப்பிட்டது, சுரேஷ் கோபியின் இந்த ரியாக்ஷனுக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் சக நடிகராக அவரை வாழ்த்தி இருக்கலாமே என, பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.





