வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக வரவேற்பை பற்றியது மட்டுமல்லாமல் திரையரங்குகளில் வசூல் சாதனை புரிந்தது. டைம் லூப் கான்செப்ட்டை சரியாக பயன்படுத்தி, எந்தவித சிக்கலும் இல்லாமல் திரைக்கதையை நேர்த்தியாக கொடுத்து பாராட்டைப் பெற்றிருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு.
இந்த திரைப்படத்திற்கு பிறகு, சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு படம் வெளியானது. ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் சிம்பு. இதனால் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையிலேயே படத்தின் விமர்சனமும் அமைந்தது.
அந்த திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, பலரது கவனத்தையும் சிம்பு ஈர்த்தார். இதன்பிறகு சிம்பு நடிப்பில் பத்து தல படம் கடந்த ஆண்டு வெளியானது. இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றியை சிம்பு கொடுப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது. இருப்பினும் ஏ ஆர் ரகுமான் இசையில் பத்து தல திரைப்படத்தின் பாடல்கள் ஹிட் ஆகின.
இப்படியான சூழலில் அவரது அடுத்த படத்தை, இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இவர் ஏற்கனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை கொடுத்து ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கவனிக்க வைத்தார். வித்தியாசமான கதை அம்சத்துடன் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம், தேசிங்கு பெரியசாமிக்கு நல்ல ஒரு பெயரை பெற்று கொடுத்தது. இந்த திரைப்படத்தை பார்த்து விட்டு ரஜினிகாந்த்தும் இயக்குனரை தனிப்பட்ட முறையில் பாராட்டினார்.
தனக்கு ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் என்று ரஜினி கூறியதால் அதற்கான பணியில் முழு வீச்சில் ஈடுபட்டார் தேசிங்கு பெரியசாமி. ஆனால் கடைசி நேரத்தில் ரஜினிகாந்த் கதைக்கு ஓகே சொல்லாததால், கமலின் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்றார். இதனைத் தொடர்ந்து வரலாற்று சம்பந்தப்பட்ட கதையை சிம்புவிடம் கூற, அதற்கு நடிகரும் ஓகே தெரிவித்தார். ஆனால் இதன் படப்பிடிப்பு தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் இருந்து வந்தது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படுவதால், அதற்கான திரைக்கதை எழுதும் பணிகளை தீவிர்படுத்தி இருந்தார் தேசிங்கு பெரியசாமி. இப்படியான சூழலில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் மிருணால் தாகூர் கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வழியாக உள்ளது. இது போக பாலிவுட் நடிகை ஒருவரும் அல்லது கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.





