இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார், வசந்தபாலன் இயக்கிய வெய்யில் படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் சிறந்த இசையமைப்பாளராக, தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களை தந்திருக்கிறார். பல விருதுகளை பெற்றிருக்கிறார்.
இசையமைப்பாளராக மட்டுமின்றி, இதுவரை 23 படங்களில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்திருக்கிறார். குறிப்பாக சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெயில், குப்பத்து ராஜா, செம, பேச்சுலர், அடியே, டார்லிங், நாச்சியார் உள்ளிட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஜிவி பிரகாஷ்குமாரின் சகோதரியான பவானி ஸ்ரீயும் ஒரு நடிகைதான். வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில், போலீஸ்காரர் குமரேசன் காதலி கேரக்டரில், பவானி ஸ்ரீ நடித்திருந்தார். இந்த படத்தின் 2ம் பாகத்திலும் பவானி ஸ்ரீ நடித்திருக்கிறார். இந்த படம், இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவர இருக்கிறது.
சினிமாவில் வாய்ப்பு தேடி வருபவர்களுக்காக ஸ்டார்டா என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழாவில் பங்கேற்ற ஜிவி பிரகாஷ்குமார், படங்களில் நடித்த அனுபவம், இசை அனுபவம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார்.
ஜிவி பிரகாஷ் பேசுகையில், நான் சின்ன வயதில் இருந்தே சினிமாவில் பணிசெய்து வருகிறேன். என்னுடன் முதன்முறையாக பணியாற்றியவர்களே அதிகம். புதியவர்களுடன் பணிசெய்வது ரொம்ப பிடிக்கும். நான் நடித்த 23 படங்களில், 17 படங்களில் புதியவர்களுடன்தான் பணிசெய்தேன். புதிய நடிகைகள், பாடகர்களுடன் பணிசெய்திருக்கிறேன்.
குளிர்பானம் சூதாட்டம் போன்ற விளம்பர படங்களில் நடிக்க பலகோடி ரூபாய் சம்பளத்துடன் எனக்கு பலமுறை அழைப்பு வந்தது. ஆனால் நான் அதை எல்லாம் மறுத்துவிட்டேன். விளையாட்டு தொடர்பான விளம்பரங்களில் மட்டுமே நடித்துள்ளேன். இப்போது திரைக்கலைஞர்களுக்கான வாய்ப்பை உருவாக்கும் இந்த செயலியை விளம்பரப்படுத்துகிறேன், என்று பேசியிருக்கிறார்.





