தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. கடந்த சில ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர். சமீபத்தில் அந்த பட்டம் இனி தனக்கு வேண்டாம் என்று நிராகரித்தார். இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா.
கடந்த 2005ம் ஆண்டில் வெளியான இந்த படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நாயகியாக அவர் நடித்திருந்தார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நயன்தாரா இடத்தை வேறு யாராலும் நெருங்க கூட முடியவில்லை. நயன்தாரா நடித்த படங்கள் ஓடினாலும் ஓடாவிட்டாலும் அவருக்கான வாய்ப்புகள் தொடர்ந்து சினிமாவில் வந்து கொண்டே இருக்கின்றன.
கடந்த 2003ம் ஆண்டில் மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு என்பவரது இயக்கத்தில் வெளிவந்த மனசினக்கரே என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நயன்தாரா. டயானா மரியம் குரியன் என்ற அவரது பெயரை நயன்தாரா என்று மாற்றியதும் இயக்குனர் சத்யன் அந்திக்காடுதான். பிறகு அதுவே அவருக்கு நிலைத்து விட்டது.
மனசினக்கரே படத்துக்கு பிறகுதான் தமிழில் ஐயா படத்தில் நயன்தாரா அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் அஜீத்குமார் விஜய் சூர்யா தனுஷ் ஜீவா ரவிமோகன் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் என முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். தொடர்ந்து மலையாளம் தெலுங்கு கன்னடம் இந்தி என பல மொழிகளிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
சினிமாவில் நடிக்க வந்து கேமரா முன்பு நயன்தாரா நின்று 22 ஆண்டுகள் ஓடிவிட்டன என்பது குறித்து நடிகை நயன்தாரா தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நயன்தாரா கூறியிருப்பதாவது, திரைப்படங்கள் என் வாழ்க்கையில் காதலாக மாறும் என்று தெரியாமல் கேமரா முன்பு நான் முதன்முறையாக நின்று 22 ஆண்டுகள் ஆகின்றன.
ஒவ்வொரு பிரேமும் ஒவ்வொரு ஷாட்டும் ஒவ்வொரு அமைதியும் என்னை வடிவமைத்து குணப்படுத்தியது. நான் யார் என்று என்னை உருவாக்கியது. என்றென்றும் நன்றியுடன் என்று நெகிழ்ச்சியுடன் நயன்தாரா அந்த பதிவில் கூறியிருக்கிறார். இப்போது தமிழில் மூக்குத்தி அம்மன் 2 ஹாய் என்ற 2 படங்களிலும் தெலுங்கில் மன சங்கர வர பிரசாத்காரு என்ற படத்தில் நடிகர் சிரஞ்சீவியுடனும் கன்னடத்தில் டாக்ஸிக் என்ற படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார்.





