திரை உலகில் நடிப்பு மட்டுமல்லாமல் பாடலாசிரியர், தயாரிப்பு உள்ளிட்ட பணிகளிலும் ஆர்வம் காட்டி வருபவர் நடிகர் தனுஷ். இப்படியான சூழலில் இயக்கத்தின் மீதும் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்படி பவர் பாண்டி என்னும் படத்தை முதல் திரைப்படமாக அவர் இயக்கினார். ராஜ்கிரண் முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.
அது போக பிரசன்னா, ரேவதி, சாயா சிங் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். பேரன் பேத்திகளை கண்ட முதியோருக்கு இருக்கும் சின்ன சின்ன ஆசைகளையும், அவர்களுக்குள் இருக்கும் காதலையும் பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் மிக அழகாக சொல்லி இருந்தார் தனுஷ். வசூல் ரீதியாக இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது.
அதுமட்டுமல்லாமல் ஷான் ரோல்டன் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன. இந்தப் படத்திற்குப் பிறகு தனது ஐம்பதாவது படத்தை, இயக்கி இருக்கிறார் தனுஷ். வடசென்னையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதன் சூட்டிங் ஆரம்பமான நிலையில், ஒரே கட்டமாக அக்டோபர் மாதத்திலேயே படத்தின் பணிகளை முடித்தார்.
தற்போது இதற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதில் தனுஷின் அண்ணன் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, சந்திப் கிஷன், துசாரா விஜயன், அபர்ணா பால முரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட இதன் படப்பிடிப்பின் 90 சதவீத பணிகளை, கிழக்கு கடற்கரை சாலை அருகே ஷெட் போட்டு தனுஷ் எடுத்து முடித்தார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர், தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலாவுடன் இணைந்து தனது 51வது திரைப்படத்தில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி இல்லாமல், அடுத்ததாக ஒரு படத்தை இயக்குவதாகவும் அறிவித்தார். இதற்காக தனது சகோதரி மகனே அவர் கதாநாயகனாகினார். முழுக்க முழுக்க காதல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதில், பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை தனுஷின் வொண்டர் பார் நிறுவனமே தயாரிக்கிறது. இதற்கான பணிகளை நவம்பர் மாதத்திலேயே தொடங்கிய தனுஷ், தற்போது அதனை முடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில், அவரது 51 வது படத்தின் அடுத்த கட்ட அறிவிப்பு நாளை வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் தனுசுடன் நாகர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.





