தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற கிராமத்தில் நேற்று விமரிசையாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று ஆரவாரம் செய்தனர். யாருமே எதிர்பாக்காத அளவுக்கு பல லட்சம் மக்கள் அங்கு திரண்டது பலருக்கும் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த அரசியல் மாநாட்டில் 50,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி என்று போலீஸ் தரப்பில் அனுமதி கூறிய நிலையில், பல லட்சம் மக்கள் அங்கு திரண்டது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் நடிகர் விஜய் 48 நிமிடங்கள் தொடர்ச்சியாக பேசினார். அதில் அவர் பல விஷயங்களை வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் பேசியது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும், தமிழகத்தை ஆளும் திமுக அரசு குறிக்கும் வெளிப்படையான கருத்துக்களை அவர் முன்வைத்தார். யாரையும் தாக்கி பேசுவது எங்கள் நோக்கம் அல்ல, மக்கள் விரும்பும் சமத்துவ ஆட்சியை தர வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம். என்னை வாழ வைத்த மக்களுக்கு நன்மை செய்வது மட்டுமே என் நோக்கம்.
மக்கள் நலன் மட்டுமே எங்களுக்கு முக்கியம். பெரியார் காமராஜர் அம்பேத்கர் வேலுநாச்சியார் அஞ்சலை அம்மாள் ஆகியோர்தான் எங்களது கொள்கை தலைவர்கள். அதே நேரத்தில் பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை நாங்கள் கண்டு கொள்ளவில்லை. அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம்.
ஆனால் அதே நேரத்தில் பெரியாரின் பெண் உரிமை, பெண் கல்வி, சமத்துவம் உள்ளிட்ட விஷயங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளும் கொள்கைகளாக பார்க்கிறோம். பெண் தலைவர்களை கொள்கை தலைவர்களாக கொண்ட ஒரே கட்சி தவெக தான் என்றும் இந்த மாநாட்டில் நடிகர் விஜய் ஆவேசமாக பேசினார். அவரது கருத்துகளுக்கு அரசியல் தலைவர்கள் பலவிதமான எதிர் கருத்துகளை கூறி வருகின்றனர். பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
எனினும் நேற்றைய அரசியல் மாநாட்டை பொருத்தவரை இது தவெகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக தான் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் நேற்று நடந்த விஜயின் அரசியல் மாநாடு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் மேடைப்பேச்சை முடித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு மற்றும் சாதி மத வர்க்க பிரிவினை வாதத்திற்கும், ஊழலுக்கும் எதிராக செயல்பட போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். மகிழ்ச்சி என இயக்குனர் பா ரஞ்சித் குறிப்பிட்டு இருக்கிறார்.





