தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருக்கும் மிக முக்கியமான இரண்டு திரைப்படங்கள் இந்த மாதம் திரைக்கு வருகின்றன. இதில் ஒன்று தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன். இந்தப் படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார். எஸ் ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி, சந்திப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன் உள்பட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படம், இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வரும் 12ஆம் தேதி மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தியன் 2 திரைப்படம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்திற்கு இத்தனை எதிர்பார்ப்பு இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அதன் முதல் பாகம் தான்.
1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சேனாபதி தாத்தாவாக நடித்திருந்த கமல்ஹாசன், தனது ஒவ்வொரு ரியாக்சன்களிலும் ரசிகர்களை திரையரங்குகளில் கைத்தட்ட வைத்தார். எப்போதும் லஞ்சம் ஊழலுக்கு எதிராக படம் எடுக்கும் சங்கர் அந்த படத்தில் தனது கருத்தை ஆழமாக பதியச் செய்திருந்தார்.
இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் கமல்ஹாசன் பெற்றிருந்தார். இந்த நிலையில், இதன் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் கொரோனாவுக்கு முன்பே தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு பிரச்சினைகளால் இதன் சூட்டிங் தடைப்பட்டு கொண்டிருந்த சூழலில், தற்போது அனைத்து பணிகளும் முடித்து ரிலீஸிற்கு தயாராக இருக்கிறது.
பன்னிரண்டாம் தேதி வெளியாகும் இந்த திரைப்படத்தில், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ் ஜே சூர்யா பாபி சிம்ஹா உள்பட ஏராளமான நடித்து இருக்கிறார்கள். இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரண்டு பாகங்களாக இதனை சங்கர் எடுத்திருக்கிறார். இதற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியன் 2 ரிலீஸ் ஆகும், அதே நாளில் பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒத்த செருப்பு, இரவின் நிழல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த பார்த்திபன், தற்போது டீன்ஸ் என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். சிறுவர் சிறுமிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம், ஏற்கனவே சர்வதேச அளவில் விருதுகளை பெற்றிருக்கிறது. படத்திற்கான எந்த ப்ரொமோஷன் பணிகளிலும் ஈடுபடாமல், நேராக அவர் 12 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.





