தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. இந்த படத்தில் நடிகர் விஜய் காட்டியிருக்கும் அதிரடி ஆக்சன் காட்சிகள் பெரிய அளவில் தளபதி ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது. மேலும் இது 100க்கு 100 சதவீதம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் என்பதும் உறுதியாகி விட்டது.
ஜனநாயகன் படத்தில் நடிகர் விஜயின் அரசியல் கட்சிக்கு ஆதரவான பல விஷயங்களை இயக்குனர் எச் வினோத் கொண்டு வந்திருக்கிறார். குறிப்பாக தளபதி வெற்றி கொண்டான் டிவிகே என்று விஜயின் அரசியல் கட்சி பெயரை டிவிகே என விஜயின் கேரக்டர் பெயராக அடையாளப்படுத்தி உள்ளனர். டிரெய்லரில் வரும் சில காட்சிகளும் அரசியல் களத்தில் அவர் பேசும் வசனங்களாகவே இருக்கின்றன.
குறிப்பாக சம்பவம் செய்யக்கூடிய நபரை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் சம்பவம் செய்வதிலேயே ரெக்கார்டு செய்பவர்களை கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்ற அறிமுகத்துடன் விஜய் வருகிறார். 2 யானைகளுக்கு நடுவே தீப்பந்தத்தை ஏந்திய நிலையில் விஜயை காட்டி இருப்பது அவரது கட்சிக்கொடியின் குறியீடுகளாக பார்க்கப்படுகிறது.
அதுபோல் ஒரு காட்சியில், இத்தனை பேரை அடித்து வீழ்த்தி இருக்கிறாய் என்றால் அப்போது நீ சூப்பர் மேன் என்று குழந்தை கேட்க அதற்கு விஜய் நான் சாதாரண ஆள் தான். ஆனால் நான் செய்யக்கூடிய சம்பவங்கள் அனைத்தும் சூப்பராக இருக்கும் என்றும் பதில் கூறுகிறார். பெண்களுக்கு பயம் இருக்கக் கூடாது. அவர்களை புலியை போல வளர்க்க வேண்டும் என்று விஜய் வசனம் பேசியிருக்கிறார்.
இந்த நேரத்தில் கதாநாயகனை கொன்றால் மக்கள் அவனை கடவுளாக்கி விடுவார்கள் என்று வில்லன் சொல்லும் காட்சியும் விஜய் மாஸாக பேசும் திரும்பி போற ஐடியா எல்லாம் இல்லே ஐ யம் கமிங் என்று சொல்லும் காட்சிகளும் அரசியலுக்கும் சினிமாவுக்கும் அவரது உணர்வை சொல்லும் காட்சிகளாக மாறியிருக்கின்றன.
ஒரு காட்சியில் அரசியல் வந்து மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் கொலை செய்வதற்கும் கொள்ளையடிப்பதற்கும் எதற்காக அரசியலுக்கு வருகிறீர்கள் என்று விஜய் சாட்டையை சுழற்றி பேசும் டயலாக் எல்லாம் பெரிய பாராட்டை பெற்றுள்ளது. மொத்தத்தில் ஜனநாயகன் படம் அரசியல் அனல் தெறிக்கும் வசனங்களுடன் மாஸாக வெளியாக போகிறது என்பதை டிரெய்லர் உறுதியாக்கி விட்டது.





