நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 3 படங்கள் அடுத்தடுத்த ரிலீஸ்க்கு தயாராக இருக்கின்றன. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஆகாச வீரன், மிஷ்கின் இயக்கத்தில் உருவான டிரெயின் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஏஸ் என 3 படங்கள் விரைவில் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதையடுத்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளார். அது காதல் கதை என்பதால் விஜய் சேதுபதி உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக வேண்டும் என்று டைரக்டர் கூறிவிட்டதால், அந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் தள்ளிப் போக வாய்ப்புள்ளது.
அதே போல் சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய எஸ்ஆர் பிரபாகரன் இயக்கத்திலும் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. விஜய் சேதுபதி ஆரம்ப காலத்தில் வளரும் நடிகராக இருந்த போது, சுந்தரபாண்டியன் படத்தில் அவருக்கு வில்லன் கேரக்டரில் நடிக்க வாய்ப்பளித்தவர் இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தெலுங்கில் பிரபல இயக்குனர் பூரி ஜெகன் நாத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி கமிட் ஆகியுள்ளார். இந்த படம் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகிறது. பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கிய கடைசி 2 படங்களும் பிளாப் ஆன நிலையில் அடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை டைரக்ட் செய்ய உள்ளார்.
இந்த படத்தில் நடிகை தபு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தமிழில் சினேகிதியே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் தேசம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் தபு. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதி படத்தில் நடித்து ரீ என்ட்ரி தருகிறார். ஆனால் இந்த படத்தில் அவர் நாயகி அல்ல. முக்கிய கேரக்டரில் அவர் நடிக்க உள்ளார்.
அதனால் இந்த படத்தில் நாயகியாக நடிக்க நடிகை திரிஷா முதலில் முடிவு செய்யப்பட்டார். ஆனால் 96 படத்தின் 2ம் பாகத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிக்க உள்ளதால் இந்த கமர்ஷியல் படத்தில் அவர்கள் ஜோடியாக நடித்தால் சரிவராது என இயக்குனர் தீர்மானித்துள்ளார். இப்போது நடிகை ராதிகா ஆப்தே இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் குமுதவல்லி கேரக்டரில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர். கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திலும் ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார்.





