நடிகர் ரஜினிகாந்த் இப்போது, தசெ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதில் பகத் பாசில், மஞ்சு வாரியார், ராணா டகுபதி, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தீபாவளிக்கு முன்பே, மும்பை சென்ற படக்குழு, ரஜினி – அமிதாப் பச்சன் நடித்த காட்சிகளை படம்பிடித்துவிட்டு வந்துவிட்டது.
திருவனந்தபுரம், நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து வேட்டையன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை மூன்று கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், இப்போது 4ம் கட்ட படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது. இதற்கான ரஜினி நேற்று, விமானத்தில் தூத்துக்குடி சென்றார்.
இந்த படப்பிடிப்பை வரும் பிப்ரவரி மாதத்துக்குள் முடித்துவிட்டு, அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினி 171 படத்தில் ரஜினி பங்கேற்க உள்ளார். இந்த படத்தில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்டையன் படத்தை பொருத்த வரை, குறி வெச்சா இரை விழணும் என்ற டயலாக்கை ரஜினி, அவரது பிறந்த நாளன்று வெளியான டீசரில் பேசி இருந்தார். அதனால் இந்த படத்தின் வசூல் இலக்கு ரூ. 1000 கோடி என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளியான மகனை தந்தை சுட்டுக்கொல்லும் சிவாஜி நடித்த தங்கப்பதகத்தின் காப்பி கதையான ஜெயிலரே 500 கோடி ரூபாய் வசூலித்தது, ரஜினிக்கு பெரிய நம்பிக்கையை தந்துவிட்டது.
இப்போது ரஜினி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வேட்டையன் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு வருகிறார். கடந்த வாரத்தில் இந்த மாவட்டங்களில் பெய்த கனமழையால் மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன, மழைவெள்ளத்தில் வீடுகள் சிக்கியுள்ளன. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு தரப்பில் நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வேட்டையன் படப்பிடிப்புக்கு அங்கு சென்றுள்ள ரஜினி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் வந்து பார்வையிடுவார். மக்களுக்கு ஆறுதலாக நேரில் வருவார் என அங்குள்ள மக்கள் எதிர்பார்த்த நிலையில், ரஜினி தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நேராக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று நடிக்க துவங்கி விட்டார். அருகில் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று அவர் பார்க்காதது அப்பகுதி மக்களை பயங்கர அதிருப்தியடைய செய்துள்ளது.





