அண்மையில் நடிகர் விஜய் தனது தளபதி மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியது இங்கு பலருக்கும் தெரியும். அப்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்த அவர், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் தான் தனது இலக்கு என்றும், தற்போது நடிக்கும் திரைப்படம் அதற்குப் பிறகு ஒப்புக்கொண்ட ஒரு திரைப்படத்தோடு திரையுலக பயணத்தை முடிப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதைக் கேட்டு விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் திரை உலக ரசிகர்களும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். விஜய் அரசியலுக்கு சென்றாலும் அவர் திரையில் தொடர்ந்து தோன்ற வேண்டும் என்பதே தங்கள் எதிர்பார்ப்பு என்று கூறி வந்தனர். இதே போல் சினிமா மார்க்கெட்டில் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கையில் வைத்துக் கொண்டு, ஒரே நாளில் அது வேண்டாம் என கூறுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும் என்று விமர்சகர்கள் தெரிவித்தனர்.
இதன் நடுவே தனது அரசியல் கட்சி சார்ந்த பணிகளிலும் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் நிவாரண உதவிகளை வழங்கினார். இதேபோல் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழகத்தின் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் அவர் பரிசளித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய விஜய், முதல்முறையாக பொதுவெளியில் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தார். மத்திய அரசு என்று கூறாமல் ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டார். இப்படி விஜயின் அதிரடி பேச்சு பலரையும் கவர்ந்தது. நீட் விவகாரத்தை அவர் கையில் எடுத்துக் கொண்ட விதம் மிகச் சரியாக இருப்பதாக பலரும் கூறினர்.
இந்த நிலையில் தற்போது, தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை மிகவும் பிரம்மாண்டமாக விஜய் நடத்த இருக்கிறார். இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆனால் இது எங்கு நடைபெறுகிறது என்பது இதுவரை கேள்விக்குறியாக தான் இருக்கிறது. இந்த மாநாட்டில் தனது கட்சி கொடியையும் அறிமுகப்படுத்த விஜய் முனைப்பு காட்டி வருகிறார்.
இப்படியான சூழலில் மாநாடு குறித்து எந்த ஒரு தகவலையும் இப்போதைக்கு வெளியிட வேண்டாம் என்று தனது கட்சி நிர்வாகிகள் இடம் விஜய் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மிக முக்கியமாக கோட் திரைப்படம் வெளியாகும் வரை, இது குறித்து பேச வேண்டாம் என்று விஜய் கூறியதாக சொல்லப்படுகிறது. படம் ரிலீஸ் ஆனதை அடுத்து செப்டம்பர் மாதத்தில் இறுதியில், தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.





