தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து நடிகராக மாறியவர் சசிகுமார். இவரது முதல் திரைப்படம் ஆன சுப்பிரமணியபுரம், தமிழ் சினிமாவிலேயே ஒரு குறிஞ்சி பூ என்று கூறலாம். அந்த அளவுக்கு அந்தத் திரைப்படம் செதுக்கப்பட்டிருக்கும். படத்தில் எந்த ஒரு காட்சியுமே தேவையில்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு அதனை இயக்கி இருப்பார் சசிகுமார்.
சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, ஈசன் என்னும் திரைப்படத்தை மட்டும் அவர் இயக்கி இருந்தார். அதேசமயம் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். இதில் நாடோடிகள் மற்றும் சுந்தரபாண்டியன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றன.
அதனை தொடர்ந்து சசிகுமார் நடித்து வந்த எந்த திரைப்படங்களும் சரியாக போகவில்லை. சொல்லப்போனால் சில படங்கள் திரையரங்குகளுக்கு வந்தது கூட இங்கு ரசிகர்களுக்கு தெரியாது. இப்படியான சூழலில் சசிகுமாருக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது அயோத்தி திரைப்படம்.
நல்ல ஒரு பீல் குட் படமாக இது எடுக்கப்பட்டிருந்தது. இதிலிருந்து சசிகுமாருக்கு ஏறுமுகம் என்றே கூறலாம். தொடர்ந்து அவர் நடித்த நந்தன் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. கருடன் திரைப்படமும் வசூல் ரீதியாக பலரது கவனத்தையும் ஈர்த்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அண்மையில், டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் சசிகுமாருக்கு மாபெரும் வெற்றியை தேடி கொடுத்தது.
இந்த நிலையில் அடுத்ததாக ஃப்ரீடம் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் சசிகுமார். இதன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், நான் பெரும்பாலும் அறிமுக இயக்குனர்களுக்கும், தோல்வி அடைந்த இயக்குனர்களுக்கும்தான் வாய்ப்பு கொடுத்திருக்கிறேன். இதில் சமுத்திரக்கனி உடன் மட்டும் இரண்டாவது முறையாக போராளி திரைப்படத்தில் நடித்தேன். நாடோடிகள் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இது அமைந்தது.
கல்வி நிறுவனங்களில் படத்தின் பிரமோஷன்களில் ஈடுபடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. மாணவரிடம் சென்று எனது படத்தை பாருங்கள் என்று அழைப்பதில் எனக்கு விருப்பமே இல்லை. பின்னாடி அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் அது நிச்சயம் தயாரிப்பாளரின் அழுத்தத்தின் காரணமாகவே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சசிகுமார் பேச்சு சரியானதுதான் என்று கூறி பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.





