தமிழ் சினிமாவில், மார்க்கண்டேயர் என அழைக்கப்படும் சீனியர் நடிகர் சிவக்குமார். சிறந்த நடிகராக மட்டுமின்றி, நல்ல மனிதராக, ஒழுக்க சீலராக சினிமாவில் நற்பெயர் பெற்றவர். அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களுடன் நடித்தவர். கடவுள் முருகன் வேடம் என்றால், அதற்கு சிவக்குமார்தான் மிக பொருத்தமானவராக இருப்பார்.
சிவக்குமாரின் மகன்கள் சூர்யா, கார்த்தி இருவரும் இன்று தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர்களாக, முன்னணி வரிசையில் இருந்து வருகின்றனர். இதில் நடிகர் சூர்யா, தன்னுடன் சில படங்களில் நடித்த நடிகை ஜோதிகாவையே மணந்து கொண்டார். ஆக, தந்தை, மகன்கள், மருமகள் என குடும்பமே கலைக்குடும்பமாக இருந்து வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில், கங்குவா படத்தை சமீபத்தில் சூர்யா முடித்திருக்கிறார். தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில், சூர்யா நடிக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதே போல், கார்த்தி 24 படங்களில் நடித்த நிலையில், ஜப்பான் அவரது 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து நேற்று, சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் ஜப்பான் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீடு நடந்தது. இதை ஒரு சிறப்பு விழாவாக, கார்த்தி 25 என்ற பெயரில் கொண்டாடினர். இதில் சூர்யா, சிவக்குமா், கார்த்தி மற்றும் கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், கங்குவா இயக்குநர் சிறுத்தை சிவா உள்ளிட்ட இயக்குநர்கள் மற்றும் நடிகர், நடிகைகளும் பங்கேற்றனர்.
இவ்விழாவில் பங்கேற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், லியோ படத்தை பொருத்த வரை, விஜய் மகிழ்ச்சியாக இருக்கிறார். படமும் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. படத்தின் பின்பகுதி சற்று சரியாக வரவில்லை என்ற குறையை நான் ஏற்றுக்கொள்கிறேன். படத்தின் வசூல் பற்றி நான் நினைப்பது இல்லை. ரஜினி 171 படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மார்ச் அல்லது ஏப்ரலில் துவங்க உள்ளது, என்றார்.
விழாவில் பேசிய நடிகர் சத்யராஜ், கோவையில் இருந்து சினிமா ஆசையில் நான் சென்னைக்கு வந்தேன். அப்போது, எனக்கு நம்பிக்கையாக இருந்தது, சிவக்குமார் அண்ணன் மட்டும்தான். சிவக்குமார் அண்ணனை பார்க்க வரும்போது சூர்யா, கார்த்தி சின்ன பசங்களாக இருப்பார்கள். அவர்களை கடைக்கு கூட்டீட்டு போய் ஆரஞ்சு மிட்டாய் வாங்கி கொடுப்பேன், என்று மலரும் நினைவுகளாக இந்த விஷயத்தை பகிர்ந்தார் சத்யராஜ்.





