தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி நடந்து வருகிறது. இதில் நடிகர் கமல்ஹாசனும் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சிக்கு தலைவராக இருக்கிறார். அரசியல் கட்சி ஆரமபித்த புதிதில் திமுக, அதிமுக, பாஜக என மற்ற அரசியல் கட்சிகளை விமர்சித்த கமல், இப்போது சைலண்ட் மேன் ஆகிவிட்டார்.
முதலில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நெருக்கம் காட்டிய கமல்ஹாசன், ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நட்பு பாராட்டினர். பிறகு திமுக, காங்கிரஸ் உருவாக்கிய இண்டியா கூட்டணியிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்நிலையில் நேற்று சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள், தமிழக அமைச்சர்கள் என திரளாக பங்கேற்றனர்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, அந்த காலத்தில் வந்த படங்களில் கருணாநிதி வசனம் இருந்தாலே அந்த படங்கள் வெற்றி பெற்றது. அந்தளவுக்கு தனது எழுத்தாற்றலால் ரசிகர்களின் மனங்களில் கருணாநிதி புகுந்தவர். அவர் வசனம் எழுதிய படங்களின் கதை வசன புத்தகங்கள் அதிகளவில் விற்பனையானது.
கடந்த 1947ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை 65 ஆண்டுகள் சினிமா பயணத்தில் அவர் இருந்தார். அவரது முதல் படம் ராஜகுமாரியாகவும், கடைசி படம் பொன்னர் சங்கராகவும் இருந்தது. 65 ஆண்டுகள் தமிழ் சினிமா உலகத்தில் அவர் பயணித்தார். அவர் தமிழக முதல்வராக இருந்த ஒவ்வொரு முறையும் தமிழ் சினிமாவுக்காக பல நல்ல திட்டங்களை அறிவித்தார்.
அதன்படி, தமிழ் சினிமாத்துறை சார்பில் நடிகர் கமல்ஹாசன் வைத்த கோரிக்கையை ஏற்று, சென்னை பூந்தமல்லியில் 140 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி செலவில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும். அதில் பெரிய எல்இடி சுவர், அனைத்து விதமான நவீன தொழில்நுட்பங்களும் அங்கு கொண்டு வரப்படும். 5 நட்சத்திர ஓட்டலும் அங்கு அமைக்கப்படும் என அறிவித்தார்.





