தமிழர் பண்டிகையாக விமரிசையாக கொண்டாடும் தைப்பொங்கலை முன்னிட்டு நாளை 9ம் தேதி நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படமும் 10ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படமும் வெளிவருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் இந்த 2 படங்களையும் திரையில் காண வெகு ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு தணிக்கை சான்றிதழ் தராத காரணத்தால் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் நீதிமன்றத்தை நாடியது. அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நாளை காலை 10 மணிக்கு மேல் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும் நாளை தீர்ப்பு சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் உடனடியாக ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது.
அதனால் ஜனநாயகன் படம் வெளியீடு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனமே நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான பராசக்தி படத்தை ரிவைஸிங் கமிட்டி பார்த்து படத்தில் இருந்து நீக்க வேண்டிய காட்சிகளை சொல்லிவிட்டனர்.
அதை மாற்றி தரும் வேலையில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில் திட்டமிட்ட நேரத்தை விட கூடுதல் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதை முடித்து தணிக்கை வாரியத்திடம் ஒப்படைத்த பின்பு தான் அவர்கள் பராசக்தி படத்துக்கு சான்றிதழ் வழங்குவார்கள். அதனால் பராசக்தி படத்துக்கும் வரும் 10ம் தேதிக்குள் சென்சார் சான்றிதழ் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பராசக்தி படம் ரிலீஸ் 10ம் தேதி என்பதற்கு பதிலாக தள்ளிப் போகலாம் என்ற தகவல் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி பராசக்தி படமும் தள்ளிப் போகவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். ஒருவேளை ஜனவரி 14ம் தேதி பராசக்தி படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்தை போலவே பராசக்தி படத்துக்கும் தணிக்கையில் சிக்கல் ஏற்பட்டால் இந்த பொங்கலுக்கு தமிழ் படங்களே இல்லை என்கிற சூழல் உருவாகும்.
தெலுங்கில் நடிகர் பிரபாஸ் நடித்த தி ராஜா சாப் நடிகர் சிரஞ்சீவி நடித்த மன ஷங்கரு வரப்பிரசாத் காரு ஆகிய 2 படங்கள் மட்டுமே வெளியாக வாய்ப்புள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் இந்த 2 படங்களை மட்டுமே பெரும்பாலான தியேட்டர்களில் திரையிட வேண்டிய கட்டாயமான சூழல் ஏற்படும். அப்படி நடந்தால் என்ன செய்வது என்று திரைப்பட விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் கவலையில் இருக்கின்றனர். தமிழ் சினிமா வரலாற்றில் ஒருபோதும் இப்படி தைப்பொங்கலுக்கு தமிழ் படங்கள் வெளிவராத ஒரு சூழல் இருந்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.





