சமீபத்தில் திமுக அரசு மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடை கால சிறப்பு ஊக்கத்தொகை என மொத்தம் ரூ. 5 ஆயிரம் வழங்கியது. மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில் பெற்று வரும் பெண்கள் மொத்தம் 1.31 கோடி பேருக்கு 6550 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதை டிவிகே தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, திருச்சியில் அரசு பொது மருத்துவமனையில் பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது மிகுந்த அதிரச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
மக்களுக்கான அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த ஆட்சியில் அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியிலிருந்து குழந்தை பறி போகும் அவல நிலை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஆகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். குழந்தையை விரைவாக மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்.
மேலும் இந்த குழந்தைக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு உடனடியாகத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குறிப்பாகப் பிரசவ வார்டுகளில் எவராலும் ஊடுருவ முடியாத அளவிற்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
இதை உறுதி செய்ய, பயோ-மெட்ரிக் முறை அல்லது அடையாள அட்டை சரிபார்ப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் ஆளுங்கட்சி திமுக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





