தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்றது. அதன்பிறகு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.
இந்த தேர்தலில் திமுக அதிமுக இரண்டுக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்த்த நிலையில் கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகளை மட்டுமே கடந்திருந்த நடிகர் விஜயின் தவெக கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியமைக்கும் ஒரு சூழல் உருவானது. திமுக 2ம் இடத்துக்கும் அதிமுக 3ம் இடத்துக்கும் தள்ளப்பட்டது.
எனினும் 108 இடங்களில் ஜெயித்த தவெக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாத சூழலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் விசிக கம்யூனிஸ்ட் கட்சிகள் முஸ்லிம்லீக் கட்சிகள் தந்த எம்எல்ஏக்கள் ஆதரவு காரணமாக இப்போது தவெக ஆட்சியமைத்து விஜய் முதல்வராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த திமுக இளைஞரணி கூட்டத்தில் சட்டசபை எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, இந்த ஆட்சியில் நிறைய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு இருக்காங்க. அதுல எந்த அமைச்சருக்கு எந்த துறைன்னு அமைச்சருக்கே தெரியலே. ஒரு அமைச்சர் நான் சுற்றுலாத்துறை அமைச்சரா, சுற்றுச்சூழல் அமைச்சரான்னு நிருபர்கிட்ட கேட்கிறார்.
இந்த மாதிரி ஒரு கேடுகேட்ட ஆட்சியை எங்காவது பார்த்திருக்கீங்களா? அமைச்சருக்கே என்ன பொறுப்புன்னு தெரியலே. எந்த இலாகான்னு தெரியாம நிருபரை பார்த்து கேட்கிறார். ஒரு கோமாளி அரண்மனைக்கு போவதால் அவன் அரசனாகி விட மாட்டான். அந்த அரண்மனை தான் சர்க்கஸ் கூடாரமாக மாறிவிடும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.
இன்னிக்கு அது நம்ம கண்ணு முன்னாடி நடந்துக்கிட்டு இருக்குது.எல்லாமே கோமாளி. ரம்மியில் சொல்வாங்க இல்லே. 13ம் ஜோக்கரா வந்தா என்னய்யா பண்றதுன்னு. அந்த நிலமையில் இந்த ஷோபா மாடல் அரசு நடந்துட்டு இருக்கு. அதை தான் நமது தலைவர் ஸ்டாலின் இங்கு ஒரு மாயாஜால கவர்ச்சி ஆட்சி அமைந்துள்ளது என்று சொன்னார்கள் என்று அந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





