தமிழ் சினிமாவில் காதலை பாடாத கவிஞர்கள் யாரும் இல்லை. கண்ணதாசன் துவங்கி இன்றைய கவிஞர் நா முத்துக்குமார் வரை காதலை அணு அணுவாக செதுக்கி செதுக்கி தங்கள் வார்த்தைகளால் கவிதையாக வடித்தவர்கள் தான். அதிலும் கவிஞர் வைரமுத்து காதல் ரசத்தை பிழிந்து ஊற்றி தனது கவிதை கிண்ணத்தில் ருசிக்க தரும் வித்தை அறிந்தவர்.
காதலை பிறர் ரசிக்க எழுதும் கவிஞர்களுக்கு மத்தியில் தனது காதல் வரிகளை தானும் ரசித்து ரசித்து ருசித்து ருசித்து எழுதும் ஒரு காதல் ரசனை கவிஞர் வைரமுத்து என்றால் அது மிகையல்ல. அவர் எழுதிய காதல் பாடல்கள் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் மனங்களின் காதலை நெகிழ வைத்த கவிஞர்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு கவிதை பதிவில் கூறியிருப்பதாவது, காதல் எனும் உயிர் பண்பு ஆண் பெண் மாமிசத்தோடு மட்டும் சம்மந்தப்பட்டது இல்லை. எல்லா நிலைகளிலும் எல்லா வயதினிலும் அது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே என்று சங்கத் தலைவி பாடுமிடத்து உடற்புணர்ச்சி காதலாகிறது. காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்று பாடும் பொழுது கடவுள் பக்தி காதல் ஆகிறது. காதல் திருமகன் என்று தசரதன் தழும்புகிற போது பாசம் காதல் ஆகிறது. உதடுகளை மாற்றி மாற்றி முத்தங்கள் பயணப்படுவது போல் இதயங்களை மாற்றி மாற்றி காதல் பயணப்படுகிறது.
மனிதர் உள்ளவரை மட்டுமல்ல இடம்பெயரும் உயிர்கள் உள்ள வரை காதல் இருக்கும். உடலோடு தொடங்கி உடல் தாண்டி உயிரில் ஐக்கியம் ஆகிற பொழுது காதல் தன் புனித யாத்திரையில் பூரணம் பெறுகிறது. எல்லா காதலுக்கும் இது நேர்வதில்லை. இன்று விற்பனையாகும் 250 மில்லியன் ரோஜாக்களும் குழல் சேர்வதில்லை.
ஆனாலும் ரோஜாக்கள் பூக்கவே பூக்கும். ஆனாலும் காதல் மலரவே மலரும். காதலைத் தடுக்க நாம் யார்? தானாய் தோன்றி தானாய் மறையும் சந்திர சூரியன் போன்றது காதல் வாழ்க காதலே; பூமியை வாழவை என்று கவிஞர் வைரமுத்து தன் எக்ஸ் பதிவில் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





