லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “லியோ” திரைப்படமானது வரும் அக்டோபர் 19-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. 7 கிரீன் ஸ்டுடியோ தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சஞ்சய்தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், த்ரிஷா, மன்சூர் அலிகான் என எக்கச்சக்கமான பிரபலங்கள் நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

லியோ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முற்றிலுமாக முடிவடைந்த வேளையில் தற்போது விஜய்யின் அடுத்த படமான “தளபதி 68” குறித்த அறிவிப்புகள் கூட சமீபத்தில் வெளியாகி இருந்தன. அதன்படி வெங்கட் பிரபுவுடன் முதல் முறையாக விஜய் இந்த “தளபதி 68” படத்தின் மூலம் இணைய இருக்கிறார்.
ஏற்கனவே அஜித்துடன் இணைந்து வெங்கட் பிரபு “மங்காத்தா” என்கிற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ள வேளையில் தற்போது தளபதி விஜய் உடன் இணைந்து அதே போன்று ஒரு பெரிய மாபெரும் ஹிட் படத்தை கொடுப்பார் என்று ரசிகர்கள் தற்போது பேச ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் லியோ படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள இந்த “தளபதி 68” படத்திற்கான படப்பிடிப்பு கூட இன்னும் ஆரம்பிக்காத நிலையில் “தளபதி 68” படமானது 26 கோடி ரூபாயை இப்போதே கைப்பற்றியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த “தளபதி 68” படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். விஜய் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வேண்டும் என்ற ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேற இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ உரிமையை பிரபல டி சீரியஸ் நிறுவனமானது 26 கோடிக்கு தற்போதே கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு “தளபதி 68” ஆடியோ உரிமைத்தொகை பெரிய அளவிற்கு விற்கப்பட்டுள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது பல மடங்கு எகிறியுள்ளது என்றே கூறலாம். அதோடு லியோ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த பின்னர் தற்போது போஸ்ட் பொரடக்சன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கலாம் என்று தெரிகிறது.
அதோடு இந்த 68-ஆவது படத்தோடு விஜய் சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தப்போவதாகவும் அண்மையில் செய்திகள் வெளியானதால் இந்த படம் குறித்த அப்டேட்டுகள் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன.





