கடந்த மாதம் 19ம் தேதி, லியோ படம் ரிலீஸ் ஆனது. விஜய், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். படம் வெளியான 12 நாட்களில், 540 கோடி ரூபாய் வசூலை கடந்தது.
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்காத நிலையில், லியோ படத்தின் வெற்றிவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த 1ம் தேதி, நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் விழா இனிதே நிறைவைடந்தது. இதில் விஜய், சூப்பர் ஸ்டார் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி, வைரலானது.
லியோ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, கடந்த மாதம் 2ம் தேதியே விஜயின் அடுத்த படம், படப்பிடிப்பு துவங்கியது. வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த விஜய் 68 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
லியோ படத்தின் வெற்றிவிழா முடிந்தவுடன் அன்று இரவே, தாய்லாந்தில் தற்போது நடந்துவரும் விஜய் 68 ஷூட்டிங்குக்கு கிளம்ப, விஜய் திட்டமிட்டு இருந்தார். ஆனால், திடீரென விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் புஸ்லி ஆனந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரை காண விஜய், மருத்துவமனைக்கு சென்றார். அதனால், அன்றிரவு புறப்பட முடியாமல் நேற்று காலை, விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். அங்கு சென்றவுடனே படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக தெரிகிறது.
அதேபோல் நடிகை திரிஷா, தற்போது விடாமுயற்சி படத்தில் அஜீத்குமார் ஜோடியாக நடித்து வருகிறார். அந்த படப்பிடிப்பு, அஜர்பைஜானில் நடந்து வருகிறது. லியோ படம் வெற்றிவிழாவில் பங்கேற்ற அவர், அன்று இரவே விமானத்தில், விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள அஜர்பைஜான் சென்று இருக்கிறார்.
விஜய், திரிஷா இருவருமே, பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் ஸ்டார்கள், சீனியர்கள். அவர்கள் நினைத்தால், ஓரிரு தினங்கள் கழித்து கூட படப்பிடிப்பில் பங்கேற்க முடியும். ஆனால், ஒரு விழா முடிந்தவுடனே படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்வது அவர்களது அக்கறையை, அவர்கள் தங்களது நடிப்பு தொழில் மீது வைத்திருக்கும் பக்தியை வெளிப்படுத்துவதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.





