பிரசாந்த் நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. முதல் திரைப்படத்திலேயே தான் கமர்சியல் கிங் என்பதை நிரூபித்த அவர், அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். 2005-15ம் ஆண்டுகளில் அவரை போல் கமர்சியல் படம் எடுக்க தமிழ் சினிமாவில் யாரும் இல்லை என்று பலரும் கூறும் வகையில் அசத்தினார் ஹரி.
முக்கியமாக அந்த நேரத்தில் அவர் இயக்கத்தில் வெளியான சாமி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பத்து குற்றவாளி தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி பாதிக்கப்படக்கூடாது என்பதை கொள்கையாகக் கொண்டு செயல்படும் போலீஸ், ஊரையே ஆட்டி படைக்கும் ரவுடி என இவர்களுக்குள் இருக்கும் மோதலை ஜெட் வேகத்தில் காட்சிப்படுத்தி வியக்க வைத்தார் இயக்குனர்.
கோவில், அருள், ஐயா, வேல், சிங்கம், வேங்கை, சிங்கம் 2 என ஹரி எடுத்த அத்தனை திரைப்படங்களுமே தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தன. அதுமட்டுமில்லாமல், குறித்த காலத்தில் படத்தை இயக்கி முடிப்பதால் தயாரிப்பாளர்களுக்கே உண்டான இயக்குனர் என்ற பெயரையும் ஹரி பெற்றார்.
இவர் நடிகர் விஷாலுடன் இணைந்து இதுவரை இரண்டு படங்கள் இயக்கி உள்ளார். இதில் தாமிரபரணி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் பெற்றது. குடும்பத்திற்குள் இருக்கும் உறவு சிக்கல்களை சரியாக சொல்லியிருந்த ஹரி, இந்த திரைப்படத்தின் மூலம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை கொடுத்தார். அந்த சமயம் ஏற்கனவே சண்டக்கோழி திமிரு ஆகிய படங்களில் நடித்திருந்த நடிகர் விஷாலுக்கு, தாமிரபரணி திரைப்படம் அடுத்த வெற்றியை கொடுத்தது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இவர்கள் பூஜை திரைப்படத்தின் மூலம் இணைந்தனர். இந்தத் திரைப்படமும் குடும்ப உறவுகளைப் பற்றி பேசி, அதில் ஹீரோவுக்கும் வில்லனுக்குமான மோதலை வலுப்படுத்தி கூறியது. தாமிரபரணி அளவுக்கு இந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை என்றாலும், வசூல் ரீதியாக பூஜை கவனம் பெற்றது. இப்படியான சூழலில் தான் ஹரி விஷால் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கிறது.
இதன் சூட்டிங் பணிகள் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்றது. இப்படியான சூழலில் படத்துக்கு ரத்னம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வீடியோவில் நடிகர் விஷால் ஆக்ரோசத்துடன் ஒருவரின் தலையை துண்டாக வெட்டுவதுபோல் காட்சிகள் இடம்பெற்றன. இதன் போஸ்டரிலும் ஒரு தலையை துண்டாக வைத்திருப்பது போல் விஷால் வருகிறார். ஆனால் இதனைப் பார்த்து ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். இதெல்லாம் 2000 ஆண்டிலேயே போய்விட்டது இப்போது போய் இப்படி ஒரு போஸ்டரை ஹரி வெளியிட்டு இருக்கிறாரே என்றும், அதர பழசாக இது இருப்பதாகவும் அவர்கள் கூறி வருகின்றனர்.





